RSS

நீலக்கண்கள்

28 Feb
நீலக்கண்கள்


லோரன்ஸ் தனது வேலை நேரம் முடிந்த அடுத்த வினாடி தனது வீட்டினுள் அவசரமாக நுழைந்தான். நெஞ்சம் படபடக்க தனது தொப்பியை கலைந்து காய்ச்சலுற்றுக் கிடக்கும் தனது மகன் ஆல்பெர்ட்டை காண விரைந்தான்.


தன் காதலியின் மறைவிற்குப் பிறகு, அவள் லோரன்ஸிற்காக விட்டுச்சென்ற ஒரே உறவு – ஆல்பெர்ட்


தன் காதலி, ‘எமி’யின் மறைவிற்குப் பிறகு அடுத்தவினாடி வாழ காரணம் இல்லாமல் இருந்த லோரன்ஸிற்கு புதிய உலகமாய், புதிய உயிராய், புதிய வாழ்கையாய் கிடைத்தவன் ஆல்பெர்ட்.


ஆல்பெர்ட்டிற்கு வயது 7ஆகிறது. அவன் வளர வளர, அவன் உருவில் எமி அதிகம் தெரிந்தாள். எமியின் கடல் குடித்த நீலமான கண்களை அப்படியே பிரதியெடுத்து வைத்திருந்தான் ஆல்பெர்ட். அந்த நீலக்கண்கள் – லோரன்ஸிற்கு ஆயிரம் வருடம் வாழ்வதற்கான தெம்பையும், அர்த்தத்தையும் தந்தது.


ஆல்பெர்டிற்கு சிறு காய்ச்சல் வந்தாலும் நிலைகொள்ளாமல் பரிதவிப்பான் லோரன்ஸ். இன்று அவனுக்கு 105 டிகிரி காய்ச்சல். அதனால், இன்று முழுவதும் ஆல்பெர்ட்டுடன் இருந்துவிட முயற்சி செய்தான். இருந்தும் தலைமையின் கட்டாயத்தினால் அவன் விடுப்பு எடுக்கமுடியாமல், வேலையிலும் கவனம் செலுத்த இயலாமல் திண்டாடினான்.


அவன் சக ஊழியர்கள் கூட அடிக்கடி லோரன்ஸை இதற்காக கடிந்துகொள்வதுண்டு. “ஒரு குழந்தையின் மீது இத்தனை பாசம் வைப்பது என்றைக்குமே தவறு. எங்களுக்கும் குழந்தைகள் உண்டு. நாங்கள் உன்னைப் போலவா கவலைபட்டுக்கொள்கிறோம். நம்மைப் போன்ற ராணுவ வீரர்கள் இத்தனை இழகிய மனதுடன் இருப்பது பெரும் தவறு. உன் மனதை சற்று கடினமாக்கிக்கொள் லோரன்ஸ். அதுதான் எல்லோருக்கும் நல்லது.”


ஆனால் எத்தனை பேர் எத்தனை முறை சொன்னாலும் லோரன்ஸ் மாறுவதாக இல்லை. அவனது ஒரே உலகம் ஆல்பெர்ட் தான்.


காய்ச்சலால் உடல் வெளிரிப்போயிருந்த ஆல்பெர்ட்டை பார்த்தவுடன் லோரன்ஸ் அசைவில்லாமல், அந்த அறையின் நுழைவாயிலிலேயே நின்றுவிட்டான். அந்த சின்ன நீல விழிகளில் ஆல்பெர்ட் அவனை பார்த்ததில், தன்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டான்.


அவனருகில் சென்று அவன் முடியைக் கோதி, அவன் நெற்றியில் முத்தமிடும் போது, அவன் இதழ்களில் உஷ்ணம் படர்ந்தது.


தனக்கு தெரிந்த அத்தனை மருத்துவத்தை செயல்முறை படுத்தியும் காய்ச்சல் குறையவில்லை.


ஆல்பெர்ட்டின் பார்வை தூரம் போகப்போக லோரன்ஸின் இதயம் கனமேறியது. இரவு நெருங்குகிறது.


இனியும் தாமதிக்காமல் தன் மகனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.


‘எத்தனை தொலைவாய் இருந்தால் என்ன? எத்தனை குளிராய் இருந்தால் என்ன? என் மகனைவிட எதுவும் எனக்கு பெரிதல்ல’ என்று ஆல்பெர்ட்டை ஒரு போர்வையில் சுற்றி, தன் கையில் ஏந்தியபடி தெருக்களில் ஓடினான் லோரன்ஸ்.


ஊர் எல்லையில் இருந்த மருத்துவரின் வீட்டை நெருங்கும் போது மணி 9 ஆகிவிட்டது. ஆனால் சிறிதும் காத்திராமல், மருத்துவரை துரிதப்படுத்தி தன் மகனை காப்பாற்றிவிட்டான் லோரன்ஸ்.


மருத்துவர் கூட, “என்ன இது லோரன்ஸ். சாதாரன காய்ச்சலுக்கப் போய் இத்தனை ஆர்ப்பாட்டமா? யாரிடமாவது காரை கடன் வாங்கி வந்திருக்கலாமே. நீ கேட்டால் கொடுக்காமலா போவார்கள். இருந்தாலும் நீ உன் மகனிடம் கொண்ட பாசம் அதீதமானது. ஆபத்தாகக் கூட மாறலாம்.” என்று எச்சரித்து, ஆல்பெர்ட்டுக்கு தேவையான அத்தனை மருந்துகளையும் தந்து, தன் காரிலே லோரன்ஸை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்.


அன்று இரவு முழுவதும் ஆல்பெர்ட்டை தன் மார்பிலேயே கிடத்தி, அவன் மீது கொண்ட பாசம், அவனது வருங்காலத்தை பற்றிய சிந்தனைகளிலேயே தூங்கிப்போனான் லோரன்ஸ்.


ஒரு குழந்தை தான் ஒருவனது வாழ்வில் எத்தனை அதிசயங்களை ஏற்படுத்திவிடுகிறது 




றுநாள் காலை, புத்துயிர் பெற்ற ஆல்பெர்ட்டின் உச்சியில் முத்தமிட்டு, அவனை பள்ளியின் வகுப்பறை வரை சென்று விட்டுவிட்டு மீண்டும் கலங்கிய கண்களுடன் தனது ராணுவதளத்திற்குச் சென்றான் லோரன்ஸ்.


தனது துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டிருந்த லோரன்ஸ் ஒரு தனி அறைக்கு வரவழைக்கப்பட்டான்.


லோரன்ஸின் முன் சில குழந்தைகள் நின்றிருந்தார்கள்.


“என்ன பார்க்கிறாய் லோரன்ஸ்? இந்த யூத குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி ‘ஃப்யூரர்’ உத்தரவிட்டிருக்கிறார். ஃப்யூரரின் உத்தரவு…இம்..யோசிக்காமல் சுடு!”


நடுங்கிய கைகளுடன் தன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்த லோரன்ஸை, மூன்றாவது நின்றிருந்த யூத சிறுமியின் நீலக்கண்கள் சுட்டெரித்தது. 

—-xxx—-
 
1 Comment

Posted by on February 28, 2012 in Prasanna Subramanian, Short Stories

 

One response to “நீலக்கண்கள்

  1. Karthika Rajendran

    February 29, 2012 at 6:41 am

    குழந்தைகள் நம்மை பார்க்கும் பார்வையில் வெளி உலகத்தை மறக்கவும் முடியும், புது உலகத்தை உருவாக்கவும் முடியும். அப்படி இருக்க, நீலக்கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா!

    A mixed sentimental combo of family and job!

     

Leave a comment