RSS

Category Archives: Prasanna Subramanian

நீலக்கண்கள்

நீலக்கண்கள்


லோரன்ஸ் தனது வேலை நேரம் முடிந்த அடுத்த வினாடி தனது வீட்டினுள் அவசரமாக நுழைந்தான். நெஞ்சம் படபடக்க தனது தொப்பியை கலைந்து காய்ச்சலுற்றுக் கிடக்கும் தனது மகன் ஆல்பெர்ட்டை காண விரைந்தான்.


தன் காதலியின் மறைவிற்குப் பிறகு, அவள் லோரன்ஸிற்காக விட்டுச்சென்ற ஒரே உறவு – ஆல்பெர்ட்


தன் காதலி, ‘எமி’யின் மறைவிற்குப் பிறகு அடுத்தவினாடி வாழ காரணம் இல்லாமல் இருந்த லோரன்ஸிற்கு புதிய உலகமாய், புதிய உயிராய், புதிய வாழ்கையாய் கிடைத்தவன் ஆல்பெர்ட்.


ஆல்பெர்ட்டிற்கு வயது 7ஆகிறது. அவன் வளர வளர, அவன் உருவில் எமி அதிகம் தெரிந்தாள். எமியின் கடல் குடித்த நீலமான கண்களை அப்படியே பிரதியெடுத்து வைத்திருந்தான் ஆல்பெர்ட். அந்த நீலக்கண்கள் – லோரன்ஸிற்கு ஆயிரம் வருடம் வாழ்வதற்கான தெம்பையும், அர்த்தத்தையும் தந்தது.


ஆல்பெர்டிற்கு சிறு காய்ச்சல் வந்தாலும் நிலைகொள்ளாமல் பரிதவிப்பான் லோரன்ஸ். இன்று அவனுக்கு 105 டிகிரி காய்ச்சல். அதனால், இன்று முழுவதும் ஆல்பெர்ட்டுடன் இருந்துவிட முயற்சி செய்தான். இருந்தும் தலைமையின் கட்டாயத்தினால் அவன் விடுப்பு எடுக்கமுடியாமல், வேலையிலும் கவனம் செலுத்த இயலாமல் திண்டாடினான்.


அவன் சக ஊழியர்கள் கூட அடிக்கடி லோரன்ஸை இதற்காக கடிந்துகொள்வதுண்டு. “ஒரு குழந்தையின் மீது இத்தனை பாசம் வைப்பது என்றைக்குமே தவறு. எங்களுக்கும் குழந்தைகள் உண்டு. நாங்கள் உன்னைப் போலவா கவலைபட்டுக்கொள்கிறோம். நம்மைப் போன்ற ராணுவ வீரர்கள் இத்தனை இழகிய மனதுடன் இருப்பது பெரும் தவறு. உன் மனதை சற்று கடினமாக்கிக்கொள் லோரன்ஸ். அதுதான் எல்லோருக்கும் நல்லது.”


ஆனால் எத்தனை பேர் எத்தனை முறை சொன்னாலும் லோரன்ஸ் மாறுவதாக இல்லை. அவனது ஒரே உலகம் ஆல்பெர்ட் தான்.


காய்ச்சலால் உடல் வெளிரிப்போயிருந்த ஆல்பெர்ட்டை பார்த்தவுடன் லோரன்ஸ் அசைவில்லாமல், அந்த அறையின் நுழைவாயிலிலேயே நின்றுவிட்டான். அந்த சின்ன நீல விழிகளில் ஆல்பெர்ட் அவனை பார்த்ததில், தன்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டான்.


அவனருகில் சென்று அவன் முடியைக் கோதி, அவன் நெற்றியில் முத்தமிடும் போது, அவன் இதழ்களில் உஷ்ணம் படர்ந்தது.


தனக்கு தெரிந்த அத்தனை மருத்துவத்தை செயல்முறை படுத்தியும் காய்ச்சல் குறையவில்லை.


ஆல்பெர்ட்டின் பார்வை தூரம் போகப்போக லோரன்ஸின் இதயம் கனமேறியது. இரவு நெருங்குகிறது.


இனியும் தாமதிக்காமல் தன் மகனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான்.


‘எத்தனை தொலைவாய் இருந்தால் என்ன? எத்தனை குளிராய் இருந்தால் என்ன? என் மகனைவிட எதுவும் எனக்கு பெரிதல்ல’ என்று ஆல்பெர்ட்டை ஒரு போர்வையில் சுற்றி, தன் கையில் ஏந்தியபடி தெருக்களில் ஓடினான் லோரன்ஸ்.


ஊர் எல்லையில் இருந்த மருத்துவரின் வீட்டை நெருங்கும் போது மணி 9 ஆகிவிட்டது. ஆனால் சிறிதும் காத்திராமல், மருத்துவரை துரிதப்படுத்தி தன் மகனை காப்பாற்றிவிட்டான் லோரன்ஸ்.


மருத்துவர் கூட, “என்ன இது லோரன்ஸ். சாதாரன காய்ச்சலுக்கப் போய் இத்தனை ஆர்ப்பாட்டமா? யாரிடமாவது காரை கடன் வாங்கி வந்திருக்கலாமே. நீ கேட்டால் கொடுக்காமலா போவார்கள். இருந்தாலும் நீ உன் மகனிடம் கொண்ட பாசம் அதீதமானது. ஆபத்தாகக் கூட மாறலாம்.” என்று எச்சரித்து, ஆல்பெர்ட்டுக்கு தேவையான அத்தனை மருந்துகளையும் தந்து, தன் காரிலே லோரன்ஸை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்.


அன்று இரவு முழுவதும் ஆல்பெர்ட்டை தன் மார்பிலேயே கிடத்தி, அவன் மீது கொண்ட பாசம், அவனது வருங்காலத்தை பற்றிய சிந்தனைகளிலேயே தூங்கிப்போனான் லோரன்ஸ்.


ஒரு குழந்தை தான் ஒருவனது வாழ்வில் எத்தனை அதிசயங்களை ஏற்படுத்திவிடுகிறது 




றுநாள் காலை, புத்துயிர் பெற்ற ஆல்பெர்ட்டின் உச்சியில் முத்தமிட்டு, அவனை பள்ளியின் வகுப்பறை வரை சென்று விட்டுவிட்டு மீண்டும் கலங்கிய கண்களுடன் தனது ராணுவதளத்திற்குச் சென்றான் லோரன்ஸ்.


தனது துப்பாக்கியை சரிபார்த்துக் கொண்டிருந்த லோரன்ஸ் ஒரு தனி அறைக்கு வரவழைக்கப்பட்டான்.


லோரன்ஸின் முன் சில குழந்தைகள் நின்றிருந்தார்கள்.


“என்ன பார்க்கிறாய் லோரன்ஸ்? இந்த யூத குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி ‘ஃப்யூரர்’ உத்தரவிட்டிருக்கிறார். ஃப்யூரரின் உத்தரவு…இம்..யோசிக்காமல் சுடு!”


நடுங்கிய கைகளுடன் தன் துப்பாக்கி எடுத்து குறிபார்த்த லோரன்ஸை, மூன்றாவது நின்றிருந்த யூத சிறுமியின் நீலக்கண்கள் சுட்டெரித்தது. 

—-xxx—-
 
1 Comment

Posted by on February 28, 2012 in Prasanna Subramanian, Short Stories

 

270

270 

பூங்கா முழுவதும் சேரும் சகதியுமாக இருந்தது.

“என் அறுபது வருசத்துல நேத்து நைட் கொட்டின மழைமாதிரி பார்த்ததே இல்லை. அப்பப்பா! எப்படி ஒரு மின்னல்! எத்தனை பெரிய இடி!”

“ஆனால் உலகமே அழிந்தாழும், எனக்கு காலையில 5 மணிக்கெல்லாம் இங்க வாக்கிங் வரலைனா எனக்கு பொழுது விடியாது. யாருமே இல்லாத வேளையில், இந்த பூங்காவே எனக்கு சொந்தம் போல இருக்கும்.”

அந்த பூங்காவின் மத்தியில் புதிதாக பெரிய குழி ஒன்று புகை மூட்டமாக இருந்தது.

“நேத்து நைட்டே நினைத்தேன். அத்தனை பெரிய இடி சத்தம்! அருகில் எங்கோ தான் இடி விழுந்திருக்க வேண்டும் என்று.”

குழி அருகில் பல செடிகள் கருகிக்கிடந்தது. அதனருகே முதியவர் ஒருவர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் பின்னால் சென்று, “இங்க இடி விழுந்ததை பாத்தீங்களா ஐயா?” என்று வினவினேன்.

அவர் தன்  தலையை மட்டும், சரியாக 270 டிகிரி திருப்பி, “ஆம்!” என்றார் என்றது.

—-x—-
 
1 Comment

Posted by on February 27, 2012 in Prasanna Subramanian, Sudden Fiction

 

பயணம்

பயணம்

‘உலகின் நிம்மதியான மனிதன் எங்கே?’

பிறப்பிலேயே கோடீஸ்வரனான நான், இந்த உலகின் நிம்மதியான மனிதனைத் கண்டுபிடுக்க ஏறத்தால என் பாதி சொத்தை ஆரூடம், டெல்ஃபை போன்ற பல சமாச்சாரங்களில் இழந்துவிட்டேன்.

வறுத்தமில்லை!

அந்த மனிதன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததே மகிழ்ச்சி! அவரைக் கண்டு, அவர் நிம்மதியின் இரகசியத்தை தெரிந்துகொண்டால் போதும்.

அவர் பெயர் நிவேரோ மிகோசி.

பல தேசங்கள் தாண்டி, பல கண்டங்கள் தாண்டி, இந்த உலகின் மறுமூலையிலுள்ள அவர் ஊரையும் நெருங்கிவிட்டேன்.

எத்தனை அழகான தீவு. மனிதனின் இயந்திர மூளை தீண்டாத பூமியின் ஒரே பாகம் இதுதானோ!

அந்த ஊர்வாசிகளிடம் நிவேரோவின் இருப்பிடம் பற்றி விசாரித்தேன். அந்த மக்களுக்கு அவர் இரகசியம் தெரிந்ததாக தெரியவில்லை. எனக்கு வழி மட்டும் சொன்னார்கள்.

அந்த இடம் மேலும் அழகாக இருந்தது. இரண்டு மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய ஏரி. எங்கு பார்த்தாலும் பச்சை. நிம்மதியான மனிதன் மட்டும் அல்ல, கடவுளே இங்கு வாழலாம். அத்தனை அமைதி. அழகான அமைதி

அந்த ஏரியின் மத்தியில் ஒரு வயதான மனிதர், தனியாக ஒரு சிறு படகிலிருந்து மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அந்த ரம்மியமான காட்சியில் மூழ்கிய வேளையில் அவர் என்னை நெருங்கிவருவதை மறந்துவிட்டேன்.

அவர் அருகில் வந்ததும், அவர் நறுமணம் என்னை நினைவுக்கு இழுத்தது.

அவரிடம், “”நீங்கள் தான் நிவேரோ மிகோசியா?””

கையில் சில மீன் வைத்து இருந்தவர், புன்னகையை மட்டும் பதிலாக தந்தார்.

அவர் முகத்தில் அத்தனை அமைதி! ‘அந்த புன்னகைக்கு எத்தனை வயது’ என்று சரியாக கூறமுடியவில்லை. “

“ஐயா, நான் உங்களைப் பார்க்க வெகுதொலைவிலிருந்து வருகிறேன். நீங்கள் தான் இந்த உலகின் நிம்மதியான மனிதர் என்பதை நான் அறிவேன். அதன் இரகசியத்தை தயவுசெய்து எனக்கு கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்”.”

நிவேரோ, “”மன்னிக்கவும்! இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லையென்றால் என் மனைவி திட்டுவாள். நான் வருகிறேன்””

—-x—-
 
 

மதிப்பு

மதிப்பு
திரு. மாதவன் ராவ்இரண்டு கோடியே நாற்பது லட்சம். மேலும் ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்!””
மூன்று முறை மணி ஒலிப்பியபின் அந்த ஓவியத்தின் ஏலம் முடிவுக்கு வந்தது.மாதவன் ராவின் செக்ரட்டரி நிருபமா, தன் பையில் இருந்த காசோலையை பூர்த்தி செய்யத்தொடங்கினாள்.
“உங்க பாஸ் ரொம்ப லக்கி மேடம். ஓவியர் செழியனோட பெயிண்டிங் கிடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.””
“உண்மையாகத்தான். இந்த பெயிண்ட்டிங், எங்க பாஸ் பல நாள் ஆசைபட்ட ஒன்னு. அதனால் தான் அவர் தினமும் இங்கு வந்து அந்த பெயிண்டிங்கை பல மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தார். லகில் இருக்கும் அத்தனை இம்ப்ரெஸனிஸ்டோட பெயிண்டிங்கையும் சேகரிக்கறதுதான் எங்க பாஸோட மிகப் பெரிய லட்சியம். அதுக்கு அவர் எத்தனை கோடியையும் செலவு செய்வார்.”
“மேடம். ஒரு சின்ன வேண்டுகோள்.””
“சொல்லுங்க”
“ஓவியர் செழியனுக்கு எங்க சபா சார்பில் ஒரு விழா எடுக்கிறதா முடிவு செய்திருக்கோம். அது வைரக்கும்  இந்த பெயிண்டிங்  இங்கு  இருந்தால் நல்லா  இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணி….”
“என்னால எதுவும் இப்போ சொல்ல முடியாது சார். இதில் எங்க பாஸ்தான் முடிவு சொல்லனும். நான் எதற்கும் உங்களுக்காக பேசி பார்கிறேன்.””
“நல்லது மேடம்.”
காசோலையை சபா செக்ரட்டரியிடம் கொடுத்துவிட்டு, பெயிண்டிங்கிற்கான உரிம்மப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு  விடைபெற்றாள் நிருபமா.
மறுநாள்.
“ஹலோ! எம்.எஃப்.எஸ் சபா?”
“ஆமாம். நீங்க?”
மறுமுனையில் தொடர்ந்தாள் நிருபமா. “நான் மிஸ்டர்.மாதவன் ராவோட செக்ரெட்டரி பேசறேன்.””
“சொல்லுங்க மேடம். ங்க போன் காலைத்தான் எதிர்பார்த்து இருந்தோம். சார் என்ன சொன்னாருங்க?”
“சார் சம்மதிச்சுட்டார். னால், எந்த டேட் வரை பெயிண்டிங் உங்களுக்குத்  தேவைபடும்னு தெரியனும்!”
“வருகிற 27ஆம் தேதி மாலை விழா வச்சிருக்கோம்மறுநாள் காலையே நீங்க எடுத்துகலாம்.””
“சரி. னால் பெயிண்டிங்க்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கனும். ங்க பாஸ் அந்த பெயிண்டிங்கை அவர் உயிரைவிட மேலாக பார்கிறார். அதனால், பெயிண்டிங்க்கு ஒரு சிறு பாதிப்பு வந்தால் கூட, உங்க சபா பெரிய விலைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்””
“பெயிண்டிங் எங்கள் பொறுப்பு மேடம்.   ஓவியத்தோட மதிப்பு தெரிஞ்சவங்க நாங்க. அதனால் முழு பாதுகாப்போட இருக்கும்.””
“நல்லது.””
“மேலும் ஒரு சின்ன  வேண்டுகோள் மேடம். விழாவிற்கு மாதவன் சாரும் வந்தா நல்லா இருக்கும்.  ஓவியத்தோட உரிமையாளர் என்பதைத் தாண்டி, இம்ப்ரெஸனிசத்தை உண்மையா ரசிக்கிற  ரசிகர். அதனால் அவர் வந்தால், இந்த விழா இன்னும் சிறப்பா இருக்கும்னு சபா சார்பா கேட்டுகறோம்.””
“”ஒரு நிமிடம். நான் பாஸிடம் கேட்டுட்டு சொல்றேன்””
சிறிது நேரம் கழித்து..” “மன்னிக்கவும், பாஸ்   27ஆம் தேதி ஒரு முக்கியமானதொழில்சங்க சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டி உள்ளது.  அதனால் அவர் வரமுடியாது. இருந்தாலும், பாஸ் சார்பில், ஒரு பாராட்டு கடிதம் உங்களை வந்து சேரும் என தெரிவிக்கச்சென்னார்.””
27ஆம் தேதி மாலை விழா நிறைவு கட்டத்தை எட்டியிருந்தது.
ஓவியத்தின் முன் சிறிய மேடை அமைத்து, கலைத்துறை அமைச்சர், சபா   நிர்வாகிகள் மத்தியில் செழியன் அமர்ந்திருந்தார். செழியனின்  கனிவான முகத்தில், மெளிதாக கோபம் தலைகாட்டியிருந்ததை யாரும் கவனிக்க தவறவில்லை.
“உலகில் பிசாரோ போல், மோனே போல், சிஸ்லி போல் இம்ப்ரெஸனிசத்தில் நம் நாட்டிலும் ஒரு உலகத்தர கலைஞன் இருப்பது நம் எல்லோருக்கும் பெருமை.. நன்றி  திரு.செழியன் அவர்களே. கடந்த ஐம்பது நாட்கள் தங்களது ஓவியத்தை எங்கள் சபாவில் கொண்டதற்காகவும், தங்களது   வருகையினாலும்  நாங்கள்  மிகவும் பெருமை அடைகிறோம். மீண்டும் ங்களுக்கு….””
முடிவுரையை முழுவதும் கேட்காமலும் கூட செழியன் மேடையைவிட்டு வெளியேறினார். அவர் முகத்தில் இருந்த கோபம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. னால் காரணம் தான் ஒருவருக்கும் புரியவில்லை.
விரைவாக அவரை பின் தொடர்ந்து அவர் காரினுள் ஏறும் போது காரணத்தை பணிவுடன் வினவினார் சபா செக்ரெட்டரி.
செழியன் இறுதியாக வாய்திறந்து, “யோவ். ஐம்பது நாளா என்னத்தையா கிழிச்சீங்க? ஒருத்தனுக்கு கூடவா என் பெயிண்டிங் தலைகீழா மாட்டியிருந்தது தெரியலை?”.”
செக்ரெட்டரியின் மன்னிப்பிற்கு காத்திராமல் செழியனின் கார், தெரு எல்லையை சென்று மறைந்தது.
முற்றும்
 
3 Comments

Posted by on February 18, 2012 in Prasanna Subramanian, Short Stories

 

ORU KUTTY KATHAI!

ஒரு குட்டி கதை! 

முன்னொரு காலத்தில், மடையூர் என்கிற கிராமத்தில் பிரம்மானந்த சாஸ்த்ரி என்னும் குருக்கள் ஒருவர் வாழ்ந்து வந்தார். 

மடையூர் மக்கள் அனைவரும் அவரை தெய்வத்திற்கு இணையாக மதித்து வணங்கினர். ஊரில் எந்த ஒரு முடிவு எடுக்கப் பட்டாலும், அது பிரம்மானந்த சாஸ்திரிகள் அருள் கூறிய பிறகே நடக்கும். இத்தனைக்கும் காரணம், சரஸ்வதி தேவியே சாஸ்திரிகளுக்கு நேரடியாக காட்சியளித்து அருள் பாவித்ததுதான். 
அன்று முதல், பிரம்மானந்த சாஸ்த்ரிகள் மடையூரின் கண்கண்ட தெய்வமாக பூஜிக்கப்பட்டார். 

ஆனால், பிரம்மானந்த சாஸ்திரிகளுக்கு ஒரு பெரும் கவலை இருந்தது. அது அவரது மகன் வித்யாதரனைப் பற்றியது. சாஸ்திரிகள் தனது மகனை தன்னைப் போன்றே ஒரு தெய்வீகவாதியாக ஆக்கிவிட வேண்டும் என நினைத்தார். ஆனால், வித்யாதரனோ, தன் தந்தையின் கனவை அதிகம் பொருட்படுத்தாமல், சுய வியாபாரம் செய்து முன்னேர வேண்டும் என்று நினைத்தான். 

ஆனால், தகுந்த அறிவின்மையின் காரணமாகவும், ஆற்றலிண்மையின் விளைவாகம், அவனால் எந்த வியாபாரத்திலும் வெற்றியடைய முடியவில்லை. 

வெகுநாட்கள் இதை சலித்துக்கொண்டிருந்த சாஸ்த்ரிகள், ஒரு நாள் பொறுமையிழந்து தனது மகனை காசிக்கு வேதங்கற்க அனுப்பிவைத்தார். 

பல வருடங்கள் காசியில் தங்கி வேதங்கள் கற்றவனாய் ஊர் திருப்பினான் வித்யாதரன். அதன் பிறகு தனது மகனின் ஞானத்தையும் பக்தியையும் ஊரிற்கு பறைசாற்றும் விதமாக, தன் மகனை, தன்னைப் போலவே சரஸ்வதி தேவியின் அருள் பெற தவம் புரியச்செய்தார் சாஸ்த்ரிகள். 

தன் தந்தையின் கட்டளையை ஏற்று, நீண்ட காலம் கடும் தவம் புரிந்தான் வித்யாதரன். இறுதியில், தேவியின் அருள் பெற வித்யாதரன் ஒரு பெரும் யாகம் நடத்தவேண்டியதாக இருந்தது. சாஸ்த்ரிகள் யாகத்திற்கு தேவயான அனைத்தையும் உடனிருந்து நடத்தினார். அந்த யாகம் பல நாட்கள் நீடித்தது. ஊர் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த செய்தி தெரியப்பட, அந்த ஊர் மக்கள் அனைவரும், வித்யாதரனின் யாகத்தை நேரில் பார்க்க பெரும்திரலாக வந்தனர். 

பதினாறு நாட்கள் அந்த யாகம் நீடித்திருந்த நிலையில், பெரிய தீச்சுவாலையின் முன்பு அமர்ந்து, யாகம் மேற்கொண்டிருந்த வித்யாதரன், சோர்வுற்றவனாய், தன் தந்தையிடம், 

“இல்லை தந்தையே. நான் கற்ற அனைத்து வேதங்களையும், நான் பயின்ற அனைத்து மந்திரங்களையும் பிரயோகித்து பார்த்துவிட்டேன். சரஸ்வதி தேவி எனக்கு காட்சியளிக்கவில்லை. எனக்கு போதிய ஞானம் இல்லை என்று நினைக்கிறேன். இத்துடன் யாகத்தை முடித்துக்கொள்வது தான் முறை.” என்றான். 

பிரம்மானந்த சாஸ்த்ரிகள் அவனை கடும் சினத்துடன் பார்த்து, “முட்டாளே, எதிரில் இருக்கும் தீயில் சரஸ்வதி தெரிகிறாள் என்று உரக்க கூறி, இரு கைகளையும் உயர்த்தி கும்பிடு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றார்.

அட!”    அன்று, அந்த நொடியில் வித்யாதரன் ஞானம் பெற்றான்! 


பின்பு, தன் தந்தையைப் போலவே சரஸ்வதி தேவியின் அருள் பெற்ற வித்யாதர சாஸ்த்ரிகள், பல வருட காலம் மடையூர் மக்களுக்கு ஆசி கூறிவந்தார். 


— முற்றும்—
 
 

Thoothan

தூ-த-ன் 

ன் ஞாபகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கா?” கீத்தன் சொன்னதை அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் அது உண்மை தான். எனக்கு தெரிந்து, எனக்கு ஞாபகம் இருக்கும் முதல் நாளே, நான் என் உடலெள்ளாம் ரத்தமாக… 

அந்த முதல் நாள்.. 

எனக்கு அந்த சித்திரவதைகளெல்லாம் பழகிப்போய் இருந்திருக்கவேண்டும். காரணம், எனக்கு அது அதிக வலியையோ, அதிக ஆச்சரியத்தையோ கொடுக்கவில்லை. எல்லாம் எதிர்பார்த்தவொன்றாகவே இருந்தது. 

தினம் தினம் ஒரு சித்திரவதை. என் உடம்பும் அதற்கு தயாராக இருந்தது. தயார் செய்யப்பட்டிருந்தது என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 

என் உடலில், என் மனதில் ஒரு புது உணர்ச்சியை உருவாக்கியது அவளின் பார்வைதான். 

கீத்தன்! எட்டடி உயரத்தில், வெழுத்த தேகத்தில், பச்சை விழிகளோடு அவள் என்னை பார்க்கும் பார்வை. ஆயிரம் ஈட்டிகளை என் நெஞ்சில் வீசியது. 

இத்தனை சவுக்கடிகளும் எனக்கு தராத துயரத்தை, அவள் என்னை பார்க்காத நிமிடங்கள் எனக்கு தந்தது. 

கீத்தன், என்னை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டவள். யாரால்? தெரியாது! தெரிந்துகொள்ளும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. எனக்கு அப்போது புரிந்ததெல்லாம், நான் இந்த உலகிற்கு புதியவன். இவள் எனக்கு புதியவள். ஆனால் இவள் எனக்கு உரியவள். 

எத்தனையோ விதவிதமான உருவங்கள் என்னைச் சுற்றித் திரிந்தாலும், இவள் மட்டும் தான் என் கவனத்தை ஈர்த்தாள். இவள் மட்டும்தான் என் மொழி பேசினாள். 

நாட்கள் செல்லச் செல்ல எங்களுக்கு அதிக தனிமை கிடைத்தது. அவளுடன் நான் பழகும் நேரங்களுக்காக நான் ஏங்கினேன். மெல்ல அவளும் என்னிடம் மயங்கினாள். கீத்தன் – என் கீத்தன் ஆனாள். 

நாங்கள் அதிக நேரம் ஒன்றாக கழித்தோம். 
வார்த்தைகள் இல்லாத மொழியில் பேசிக்கொண்டோம். 
நாங்கள் ஒன்றானோம்! 

அந்த புணர்ச்சியின் முடிவில் அவள் கூறிய வார்த்தைகள் தான், “உங்களிடம் நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்.” 

“இதை நான் சொல்வது வெளியில் தெரிந்தால், என் தலை வெட்டப்படும். பரவாயில்லை. இதற்கு மேலும் என்னால் மறைக்கமுடியாது. என் உயிரைவிட நம் காதல் எனக்கு மேலானது.” கீத்தன் 

நான் புரியாமல் விழிக்க., 

“ஆம்! நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து கடத்தப் பட்டவர். உங்களுக்கு ஞாபகம் இருக்காது. காரணம், உங்கள் நினைவுகளை இவர்கள் பறிமுதல் செய்திருப்பார்கள்.” 

இது தான் என் அத்தனை அதிர்ச்சிக்கும் காரணம். இத்தனை நாள் இறந்தகாலம், எதிர்காலம் என எதுவும் இல்லாமல் கிடந்த எனக்கு, இவள் செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 

“இவர்கள்?” 

கீத்தன்,“இந்த பால்வீதியின் கூட்டமைப்புத் தலைவர்கள்! சுற்றியுள்ள அத்தனை கிரகங்களையும் அடிமைகளாக்குவதில் எங்கள் நெபுலா கூட்டணியிற்கும், கேனிஸ் கூட்டணிக்கும் பெரும் போட்டி நடக்கிறது. அதன் முதல் கட்டம் தான் இந்த ஆள் கடத்தல்.” 

எனக்கு என் உயிரின் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவிற்கு வந்தாலும், இப்போதுதான் ‘அடுத்து என்ன நடக்கப்போகிறது’ என்ற பயம் எழுகிறது. 

“ஒவ்வொரு கிரகத்திலிருக்கும் உயிர்களும், அந்த கிரகத்தில்,ஒரு தலைமை உயிரின் கீழ் செயல்பட வேண்டும். அந்த தலைமை உயிர், எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். இது தான் இவர்களின் திட்டம். உங்களைப் போலவே ஜீவராசிகள் இருக்கும் அத்தனை கிரகத்திலிருந்தும் உயர் ரக உயிர்களை கடத்திவருவார்கள். அவர்களுக்கு அவர்களின் கிரகத்தில் இருக்கும் மற்ற உயிர்களை ஆழும்விதமாக பயிர்ச்சிகளும் அளிக்கப் படும்.” 

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவள் கைகளில் ஏதோ தீபோல் பளிச்சிட, “எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் உடனே செல்ல வேண்டும்.” என்று கூறி நொடிப் பொழுதில் மறைந்துவிட்டாள். 



நான் இன்று கேட்டவை, என் மனதை அதிகம் வாட்டியது. என்னுடைய ஞாபகங்களை மெல்ல மெல்ல என் ஆழ்மனதிலிருந்து வெளிப்பட வைத்தது. 

அன்றிரவு, நான் கண்கள் மூடிய வேளையில், நான் ஒரு சிறுவனாக பச்சை புல்வெளியில் சுற்றித்திரிந்த காட்சி என் கனவில் விரிந்தது. வண்ணவண்ண பூக்கள். அழகிய நதி. ஆனால், என்னைச் சுற்றியிருந்த ஆடுகளெல்லாம் திடீரென்று பயந்தோட, விண்ணிலிருந்து பெரும் இரைச்சலுடன் என் முன் தரையிறங்கியது ஒரு…… 

என் கனவு முடியும்முன் நான் தட்டி எழுப்பப்பட்டேன். இன்றும் அதே சித்திரவதைகளுக்காக என்னை அழைத்துச் செல்கிறார்கள். எனக்கு விழிகளெல்லாம் ‘எங்கே என் கீத்தன்?’. 

மூச்சுக்காற்று தடை செய்யப்பட்ட ஒரு கண்ணாடி பெட்டியில் என்னை அடைத்து வைத்திருக்கும், இன்றைய நாளுக்கான என் இறுதிச் சித்திரவதை முடியும் நேரத்தில் என் கீத்தன் அந்த இடத்தில் தோன்றினாள். 

அவள் பார்வையில் இன்று உயிர் இல்லை. முகமெல்லாம் மேலும் வெழுத்து, உடல் இழைத்திருந்தாள். 

பணியாட்களை அனுப்பிவிட்டு என் அருகே வந்து என் நெற்றியில் அவள் உதட்டை பதித்துக்கொண்டாள். நான் சிரித்தேன். 

அவள் அழுதாள். 

என்ன ஆச்சு கீத்தன்?” 

“நாம் பிரியப்போகும் நாள் நெருங்கிவிட்டது. நீ கடைசி கட்ட பயிற்சிக்கு தயாராகிவிட்டாய். அதைக் கூறத்தான் என்னை நேற்று அழைத்திருந்தார்கள்” 

“எனக்கு புரியவில்லை. இந்த பயிற்சி முடிந்த பின்பு என்னை எங்கே அழைத்துச்செல்வார்கள்?


 “பூமிக்கு! அதுதான் உன் கிரகம். அங்கே உனக்காக அத்தனையும் தயார் நிலையில் உள்ளது!” 

“உன்னை நான் கண்டிப்பாக பிரியவேண்டுமா?” 

“ஆம்! ஆனால் கவலைப்படாதே. நீ அதிக நாள் பூமியில் இருக்க வேண்டியதில்லை. இது ஒரு முதற்கட்ட பரிசோதனைதான். அதனால் குறிப்பிட்ட சில கடமைகளை நீ முடித்த பிறகு, மீண்டும் இங்கு அழைத்துவரப்படுவாய். நான் காத்திருப்பேன்” 

அவள் மீண்டும் என் நெற்றியில் உதடுபதிக்க, புதிதாக சிலர் வந்து என்னை கடைசிகட்ட பயிற்சிக்காக அழைத்துச் செல்ல அவளிடம் அனுமதி வாங்கினார்கள். 

கண்ணில் நீர்பெருக அவர்களுடன் நான் செல்லும் வேளையில் என்னையே பார்த்தவாரு நின்றிருந்தாள் என் கீத்தன். 

மனதை திடப்படுத்திக் கொண்டு என் இறுதி பயிற்சியை முடித்து, பூமியில் என் கடமையை நிறைவேற்றி விரைவில் என் கீத்தனுடம் இணைய ஆயத்தமானேன். 

‘என் இறுதிப் பயிற்சி எங்கே? என் இறுதிச் சித்திரவதை என்ன?’ 

அவர்கள் என்னை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்றனர். 


அங்கே எனக்காக ஒரு சிலுவை நின்றிருந்தது. 


—முற்றும்—

 
 

ரசனை

ரசனை 

மெட்ராஸ் ஆர்ட் மியூசியத்தின் வாசலில் மஹதியை இறக்கிவிட்டு, தனது பைக்கில் நின்றவாறே சோம்பல் முறித்தான் ஆதித்யா.

“நீ உள்ளே வரலை?”, மஹதி

“உள்ளே சொக்கா போடாதா பொண்ணுகளோட பெயிண்டிங்ஸ் இருக்குமா?” அசடு வழிய கேட்டான் ஆதித்யா.

“ஒழிஞ்சு போ!”  பொய்யான கோபத்துடன் மியூசியத்துள் நுழைந்தாள் மஹதி.

ந்த உலகம், இந்த ஆதித்யா, இந்த காதல் என அனைத்தையும் மறந்து, மஹதி அந்த ஓவியத்தில் லயித்திருந்தாள்.

‘கடவுள், மனிதனை படைத்ததற்கான உச்சக்கட்ட காரணம் – இந்த ஓவியம்’ 
அந்த மியூசியத்தில் பார்வையிட வந்த ஒவ்வொருவரும் நகர்ந்து கொண்டே செல்ல, கடந்த மூன்று மணி நேரமாக ஒரே ஓவியத்தில் தன் மனதை இழந்த மஹதி, உணர்ச்சியின் வெளிப்பாடாக, கண்ணில் நீர் ததும்ப “எத்தனை அழகு!” என்றாள்.
“இது வெறும் நகல் தான். உண்மையான ஓவியத்தை நீ பார்த்ததுண்டா?” என்றது மஹதிக்கு பின்னால் இருந்து ஒரு குரல். 
அவள் திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்க்க, ஒரு மனிதர் ‘டீ-ஷர்ட் ஷாட்’ஸுடன் புன்னகைத்தார். மனிதருக்கு அறுபது வயது இருக்கும். இல்லை இல்லை, ஒரு ஐம்பது?, நாற்பது? சரியாக சொல்லமுடியவில்லை. 
மஹதி அவரை புரியாமல் விழிக்க, “இந்த ஓவியத்தோட ஒரிஜினல் காப்பி பார்த்திருக்கிறாயா?” என் மறுபடி வினவினார். 
இல்லையென்று தலையசைத்த மஹதியின் அருகில் வந்து, “நான் பார்த்திருக்கிறேன். நியூ யார்க் ஆர்ட் மியூசியத்தில். இட் வாஸ் ரியலி அமேசிங். வான்காவோட ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் அப்பட்டமா தெரியும்.” என்று கண்ணாடி கண்களில் அந்த நகல் ஓவியத்தை மேலும் ஒருமுறை வருடினார். 
“ஆனால் என்னுடைய ஃபேவரைட், வான்காவோட ‘கஃபே டெரேஸ்’தான். அதை பார்பதற்காகவே நெதர்லாந்து போயிருந்தேன். அதனுடைய ஒரு காப்பிகூட இங்க இருக்கு. பார்த்திருக்கியா?” 
மீன்டும் இல்லையென்று தலையசைத்த மஹதியின் கைகளை பற்றி அவளை அடுத்த அறைக்கு இழுத்துச் செல்லும்போது மஹதி செய்வதறியாது திகைத்திருந்தாள். 
எந்த ஒரு சக இளைஞன் கூட தன்னிடம் இத்தனை உரிமை எடுத்துக்கொண்டதில்லை. தன்னைவிட வயதில் பல மடங்கு மூத்த ஒரு மனிதர், தன் கைகளைப் பற்றி, இத்தனை உரிமையுடன் இழுத்துச் செல்வது மஹதிக்கு ஆச்சரியமாக இருந்தது. 
மஹதி, அந்த மனிதரிடம் இறுதியாக வாய்திறந்து பேசுவதற்குள் அவர்கள் அந்த புதிய ஓவியத்தின் முன் நின்றிருந்தனர். 
“லுக் அட் திஸ் பெய்ண்டிங், யங் லேடி! இம்ப்ரெஸனிஸத்தோட உச்சக்கட்டம். கீழே இருக்கும் தரையில், வெளிச்சத்தின் பிரதிபளிப்பை பார். இந்த மனிதர்களைப் பார். இந்த மாதிரி ஓவியங்களை அங்குளம் அங்குளமாக ரசிக்கனும். அப்பதான புரியும்! ” 
தன் ஓவியப் பேராசிரியர் கூட ஒரு ஓவியத்தை இத்தனை ரசிப்பாரா என்று மஹதி வியந்தாள். இவர் கண்களில் எத்தனை வியப்பு! அவளுக்கு இந்த புது மனிதரை பிடிக்கத்தொடங்கிவிட்டது. 
மாலை நான்கு மணிக்கு, அந்த மியூசியத்தின் வாசலில், மஹதி “சார், எனக்கு ஆச்சரிமா இருக்கு. உங்களுக்கு எப்படி பெயிண்டிங்ஸ் மேல இத்தனை ஈர்ப்பு? நம்ம ஊர்ல இப்படி ஒரு ஆளா?” 
“எனக்கும் ஆச்சர்யம் தான். கடைசியா எனக்கு இந்த ஓவியங்களை பத்தி மனசுவிட்டு பேச ஒரு ஆளு கிடச்சதுக்கு. அதுவும் ஒரு அழகான பெண்!” 
மஹதி சின்ன புன்னகையுடன் அவரிடமிருந்து விடைபெறும் வேளையில், “சார், அடுத்து உங்களை எப்போ பார்க்கலாம்?”
“நாளை மாலை! சாந்திபவனில்! ‘ஃபிலிம் ஃபெஸ்டிவளில்’!” என்றார் பத்மநாபன் என்று இப்போது பெயர் தெரிந்துவிட்ட அந்த மனிதர். 
றுநாள் இரவு, படம் பார்த்துவிட்டு எல்லோரும் வீடு திரும்பும் நேரத்தில்,

“போன வருஷம், இங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்தேன். ‘தி எனிமி’ன்னு. இன்னும் மனசுக்குள்ளயே நிக்குது. படத்தோட கேமரா மேனை கட்டிபிடிச்சு வாழ்த்தலாம் போல இருந்தது” 

இந்தியாபோன்றொரு நாட்டில் தன்னைத்தவிற எவருக்கும் கலைகளின் மீதும், காவியங்களின் மீதும் ரசனையில்லை என்று அவள் நினைத்திருந்தது எத்தனை தவறு என்று மஹதிக்கு புரிந்தது.

நாட்கள் செல்லச் செல்ல பத்மநாபனின் கலையார்வமும், ரசனையும் மஹதியை அதிகம் ஈர்த்துவிட்டது, இறுதியாக தன் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு சக ஜீவனை இந்த பூமியில் கண்டுபிடித்துவிட்டதாய் மஹதி உணர்ந்தாள். இந்த முதியவரின் நட்பு அவளுக்கு பரவசத்தை ஏற்படுத்தியது.

தினமும் மஹதி பத்மநாபனை சந்தித்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை பற்றி விவாதித்தார்கள். ஒரு நாள் ஹம்மிங் பறவை, மற்றொரு நாள் ‘ஹிட்லர் – ஈவா பிரான்’ என உலகின் அத்தனை விஷயங்களையும் பற்றி பேசி சிலாகித்தாற்கள்.

பத்மநாபனை பார்க்காத நேரங்களை நொந்துகொண்டாள்.

ஒரே மாதிரியான ரசனை. ஒரு பெண் எதிர் பார்க்கும் மென்மை, பக்குவம், என தனக்கு இந்த உலகத்தில் ஏற்ற துணை இவர்தானோ என நினைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மஹதி பத்மநாபன் மேல் காதல் கொண்டாள்.

தன் தந்தையை விட வயது மூத்தவராக இருப்பாரோ? இருந்தும் வயது ஒரு பொருட்டில்லை என்று தனனைத்தானே சமாதானமும் செய்துகொண்டாள்.

ரு நாள், இத்தாலிய உணவகத்தில் ‘பாஸ்தா’வின் வரலாற்றை பற்றி பத்மநாபன் கூறுவதை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தாள். 


தன் காதலை அவரிடம் சொல்ல சரியான தருணத்தை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் மஹதியின் செல்போன் சினுங்கியது . 


பலமுறை அழைப்பை துண்டித்தும், மீண்டும் மீண்டும் கத்தியது அந்த செல்போன். இறுதியாக பேசினாள். 


“ஆதித்யா, நான் இங்கு முக்கியமான வேலையாக இருக்கிறேன்! தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே.” 


“ஆனால் நான் உன்னிடம் ஒரு வாரமாக பேச முயற்சி செய்கிறேன். என்ன ஆச்சு உனக்கு. என்னை மறந்துட்டாயா?” 


“நான் உன்னிடம் பேசும் சூழ்நிலையில் இல்லை”


“என்னை மறந்துட்டாயா? இல்லை பிடிக்கலையா?” 


எதிரில் அமர்ந்த பத்மநாபன் தன்னை உற்று கவணிப்பதை உணர்ந்த மஹதி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் செல்போனை ‘ஆஃப்’ செய்துவிட்டு, “என் நண்பன். பணம் கடனா கேட்டு தொல்லை செய்கிறான்.” 


பத்மநாபன் புன்னகைத்தார்.
தே நாள் இரவு. பத்மநாபன் தன் அறையில், கையில் விஸ்கியுடன் அமர்ந்திருந்தார். 
“இதுக்குபோய் கவலை படலாமா. நான் அப்பவே சொன்னேன். இந்த மாதிரி பொண்ணுகளை எல்லாம் நம்பமுடியாதுன்னு. இப்பயாவது உனக்கு புரிஞ்சதே! அதுவுமில்லாமல், இந்த பெயிண்டிங், ஃபோட்டோகிராபி, குச்சுப்புடின்னு சுத்தற பொண்ணெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது. நம்ம ஜட்ஜ் ரவிசங்கருக்கு ஒரு பொண்ணு இருக்காள், ஸ்ருதின்னு. நல்ல அழகு, நிறைய பணம். நம்ம குடும்பத்துக்கு தகுந்த பொண்ணு. நாளைக்கு போய் அவளை மீட்பண்ணு. சரியா?”

தன் தந்தையின் வார்த்தைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான் ஆதித்யா.

முற்றும்

 
1 Comment

Posted by on September 23, 2011 in Prasanna Subramanian, Short Stories

 

Birthday Wishes To PERIYAAR

“If god is the root cause for our degradation destroy that god. If it is religion destroy it. If it is Manu Darma, Gita, or any other Mythology (Purana), burn them to ashes. If it is temple, tank, or festival, boycott them. Finally if it is our politics, come forward to declare it openly” – Periyaar

 
1 Comment

Posted by on September 16, 2011 in Food For Eyes, Prasanna Subramanian

 

வெற்றி ?

வெற்றி ? 

தாஜ் ஹொட்டலின் ஒரு சிறிய அறையில் இந்தியாவில் உள்ள அத்தனை வர்த்தக ஜாம்பவான்களும் கூடியிருந்தனர். மதிப்பிற்குறிய அத்த்னை நிருபர்களுக்கு முன் ஜெய்ராமிற்கு பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது. 
ஆசியகண்டத்தின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த சந்தோஷத்தில் மலர்ந்த முகத்துடன் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தான் ஜெயராம். 
“நான் என் வாழ்கையை பூஜியத்தில் தொடங்கினேன். என் தந்தை எனக்காக விட்டுப்போனது இறுபது கோடி ருபாய் கடன் மட்டும் தான். பணம் என்பது எல்லோர்க்கும் அத்தியாவசியம். எனக்கு உயிர்மூச்சு. இன்று நான் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரன். இது வெறும் ஷேர் மார்க்கட்டில் ஏற்பட்ட சுழற்ச்சியால் கிடைத்த வெற்றியல்ல. இதற்காக நான் பல விஷயங்களை இழந்ததிருக்கிறேன். பல நாள் தூக்கம், பல வேளை சாப்பாடு, என் குடும்பத்துடன் நான் செலவு செய்திருக்க வேண்டிய பொன்னான நேரங்கள். ஆனால் இன்று நான் அடந்த வெற்றி, என்னுடை அத்தனை இழப்புகளையும் ஈடுசெய்துவிட்டது.”
நிருபர், “ உங்களுடைய அடுத்த இலக்கு?” 
“உலகத்தின் நம்பர் 1 பணக்காரன்!” என்று ஜெயராம் பதிலளித்த வேளையில் ஜெயராமின் மனைவி லதா, அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து ரமணிச்சந்திரன் நாவல் படித்துக்கொண்டிருந்தாள்.
 
 

அப்பா

அப்பா 

னக்கு எப்போதுமே என் அப்பாவை பிடிக்கும் தான். ஆனால் அதை வெளிபடுத்துவதற்கான நேரம் தான் கடைசி வரை அமையாமல் போய்விட்டது.

இன்னும் சொல்லப்போனால் அவர் மறைந்த பின் தான் அவரை நான் எவ்வளவு நேசித்தேன் என்பது எனக்கே தெரிந்தது. அதுவும் பிரசவத்துக்காக என் மனைவியை அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனிமையில் தவிக்கும் இந்நாட்களில் தான் என் அப்பாவின் நினைவுகள் என்னை அதிகம் சூழ்கின்றது.

சராசரியான தந்தை – மகன் உறவு எங்களுக்குள் அமையவில்லை. காரணம்?

நான் சராசரியான மகன் தான். ஆனால் என் அப்பா சராசரியான தந்தை இல்லை.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் அறிவை தேடி போகவேண்டும். அதன் பிறகு அவனுக்கான சமுதாய பொறுப்புகள் அவனுக்கு வந்து விடும். ஆனால் என் அப்பாவின் அறிவுத்தேடலே என் அப்பாவை என்னிடம் இருந்து, இந்த உலகத்திலிருந்தே பிரித்து விட்டது. அதுவும் அத்தனை வித்தியாசமான தேடல்!

அவர் கேட்டது – ‘மரணத்திற்குப் பின் என்ன?’  ‘மனிதன் இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா?’  ‘மறுஜென்மம் உண்டா?’.

இந்த கேள்விகளை புத்தகம் அளவிலே அவர் நிறுத்தியிருந்தால் அவர் நன்றாக இருந்திருப்பார். ஆனால் அவர் உண்மையை தேடி பல எல்லைகளை தாண்டிச் சென்றுவிட்டார்.

ஊரில் எங்கு இறங்கல் செய்தி வந்தாலும், கேமிராவையும் சவுண்டு ரெகார்டரையும் எடுத்திக்கொண்டு சென்றுவிடுவார்.

ஊருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் பெயர் கெட்டது. சில நாட்களிலேயே ஊர் அவருக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டிவிட்டது. ஆனால் அப்போதும் அவர் தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை.

ஒரு நாள் நள்ளிரவில் அவரை வீட்டில் காணாமல் தேடி, இறுதியில் சுடுகாட்டில் கண்டபோது தான் எனக்கே கொஞ்சம் பயம் வந்தது. இந்த அகோரமான தேடலை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

ஒரு நாள் எங்களுக்குள் சண்டை வழுத்தது. அதன் காரணமாக நான் என் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அங்கு நின்றது தான எங்கள் உறவும்.

அப்பா மறைந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் அவரின் நினைவுகள் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போனது. கனவுகளும் கூட அவர் அவருடை அறையிலிருந்து அழைப்பதைப்போல் அடிக்கடி வந்தது. இறுதியாக ஒரு நாள் அவரின் பூட்டிய அறையை திறந்தேன்.

தூசி அடர்ந்திருந்த அறையில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் தான். அத்தனையிலும் ஏதோ ஒரு விதத்தில் மரணம் இருந்தது. அவருடைய மேசைமேல் மஞ்சள், நீலம், ரத்தச்சிவப்பு என பல நிறங்களில் காய்ந்த ரசாயனங்களும் கண்ணாடிக் கோப்பகளும்.

என் அப்பா ஒருமுறை என்னிடம் கேட்டார். ‘நம்மை விட அறிவியலிலும் கலாச்சாரத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னமே முன்னேறிய பண்டைய எகிப்தில் ஏன் இறந்த பிணங்களை பதப்படுத்தி பாதுகாத்தனர்?’

சரியான பதில் தெரியவில்லையென்றாலும் அது மூடநம்பிக்கைகளின் உச்சக் கட்டமென்றே புரிந்தது.

அவர் அலமாரியிலிருந்த புத்தகங்களின் சில அட்டைப்டங்கள் என்னை ஈர்த்தது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு புத்தகமாக படித்தேன். அத்தனையும் பிதற்றல்கள். சாட்சியங்கள் ஏதும் இல்லாத புலம்பல்கள்.

பல புத்தகங்களில் விஞ்ஞானம் கலந்த விக்கிரமாதித்தன் கதைகள். இந்த கதைகளெல்லாம் என் அப்பாவை எப்படி இத்தனைதூரம் கவர்ந்திருக்க முடியும் என்று வியந்துகொண்டேன்.

நாளாக நாளாக அந்த புத்தகங்கள் மூலம் என் அப்பா என்னுடன் உறையாடுவதுபோல் உணர்ந்தேன். முட்டாள்தனம் என்று நினைத்தாலும், அந்த புத்தகங்களில் ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக, அந்த புத்தகங்கள் மூலம், மரணத்தில் ஒரு வசீகரம் இருப்பதாய் உணர்ந்தேன். என் அப்பா என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கத் தொடங்கியது.

அந்த புத்தகங்கள் அனைத்தும் கூறியது, ‘மறைந்த உயிர்கள் இந்த உலகத்தில் மீண்டும் உயிர்க்கும்’ என்பதுதான். ஆனால் ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

அது கூறியது, ‘பண்டைய சீன அரசாட்சியான ‘ஹன்’ அரச காலத்தின் மன்னன் ஒருவன் தன் லட்சியத்தை அடையும் முன் தனக்கு முதுமை வந்துவிட்டது என்று சில மூலிகைகளை அரைத்துக் குடித்துவிட்டு இறந்துவிட்டான். பின் அவன் தன் மரணத்தறுவாயில் கூறியது போலவே அதே உடல் அம்சங்களுடன் மீண்டும் பிறந்து அந்த இலட்சியத்தை நிறைவேற்றினான்’ என்றும் இருந்தது.

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவன் இறந்து கிடந்த நிலை.

கண்கள் இரண்டும் சிவந்து , நாசிதுவாரங்களில் வெண்மை படிந்து, நாக்கு மற்றும் கால் நகங்கள் நீலமாய், என அப்படியே என் அப்பாவின் மரண நிலை!!

எனக்கு நடந்தது புரிந்ததுவிட்டது. உடல் வியர்த்தது. என் அப்பா எத்தனை பெரிய காரியத்தை செய்திருக்கிறார்.

இது உண்மையா?

உண்மையாக இருந்தால்?

நினைக்கும் போதே எனக்கு நெஞ்சு படபடத்தது. என் அப்பாவும் மீண்டும் உயிர்த்தெழுவாரா? அந்த புத்தகக் குறிப்பின் அடியில் என் அப்பா கைபட எழுதிய ஒரு வாசகம் என்னை மேலும் நிலைகுழையச் செய்தது.

‘இதை நீ படிப்பாய் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் இந்த முடிவை எடுக்கிறேன். ஆனால் இதில் உன் உதவி எனக்கு தேவை. நான் என் உடலைப் பிரிவது குரு பௌர்ணமியில். அதிலிருந்து சரியாக பதினாலாவது பௌர்ணமியின் போது எனது உடலை தோண்டி எடுத்து , எனது மண்டை ஓட்டை மட்டும் சரியாக இரவு 1.25 மணிக்கு உடைத்து விட வேண்டும். இது உன் தந்தையாக நான் கேட்கும் ஒரே வேண்டுகோள். மறந்துவிடாதே!’ 

என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடுங்கிய கைகளுடன் கேலண்டரை எடுத்துப் பார்தேன். ஆச்சிரியம் மீது ஆச்சரியம்! அப்பா குறிப்பிட்ட பதினாலாவது பௌர்ணமி நாளை மறுநாள்.

என் அப்பாவின் நினைவுகளும், அவர் தோன்றிய கனவும், நான் அவர் அறையை திறந்ததும், அவர் புத்தகங்களை படித்ததும், அவர் எழுதிய குறிப்பை சரியான நேரத்தில் படித்ததையும் இயல்பாக, எதேர்ச்சியாக நடந்த நிகழ்வாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இத்தனை நாட்கள் என் அப்பா என்னுடன் தொடர்புகொண்டிருந்தாரா?

இதை இதற்கு மேலும் லேசாக விட்டுவிடக் கூடாது.

எனக்கு என் அப்பா வேண்டும். எப்படியேனும் வேண்டும்.

அந்த புத்தகத்தில் இருந்த அத்தனை குறிப்புகளையும் சேகரித்தேன். அவர் குறிப்பிட்டிருந்த அந்த இரவும் வந்தது.

பெளர்ணமி நிலவு உச்சி வானை அடையும் வரை காத்திருந்து பின் என் அப்பாவின் கல்லறையை தோண்ட ஆரம்பித்தேன். அந்த இரவில் நிலவு வெளிச்சத்தில் கல்லறைகள் அனைத்தும் வெள்ளி முலாம் பூசியது போல் இருந்தது. அத்தனை குளிரிலும், என் உடலை வேர்வை நனைத்தது. மனதிற்குள் அப்பா அப்பா என்று சொல்லிக்கொண்டே தோண்டினேன்.

அந்த அழுகிய நாற்றத்தை கூட நான் பொருட்படுத்தாது தோண்டி முடித்தேன். இறுதியில் என் அப்பாவின் மண்டை ஓட்டினை வெளியே எடுத்து சரியாக 1.25 மணியாகும் வரை காத்திருந்தேன்.

இரவை உணரவில்லை. அதன் குளிரை உணரவில்லை. இந்த உலகம் எதுவும் உணராமல் ஒரு கையில் சுத்தியலுடன் என் அப்பாவின் மண்டை ஓட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். சரியாக 1.25 மணியாக இன்னும் இருபது வினாடிகள்தான் இருந்தது.

உள்ளங்கையில் இடைவிடாமல் வியர்த்தது. மணி சரியாக 1.25ஐ அடிக்க என் சுத்தியல் என் அப்பாவின் மண்டை ஓட்டை தகர்த்தது.

வேலை முடிந்ததும் அங்கிருந்து விரைந்து, வீட்டுக்கு வந்து போர்வைக்குள் ஒளிந்துகொண்டேன். நான் செய்த செயலின் தாக்கம் இன்னும் என் மனதை விட்டு துளியும் விலகவில்லை.

என் அப்பா என்னை தேடி வரப்போகிறாரா?‘ என் அறையில் மாட்டியிருந்த அவரது ஃபோட்டோவில் அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

எனக்கு இதயம் கனமாக தெரிந்தது. பல நாள் தண்ணீர் அருந்தாததைப் போல் தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க நான் அடுத்த அறைக்குச் செல்லும் போது டெலிபோன் அலறியது. சில வினாடிகள் என் இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டது.

யார் ஃபோன் செய்வது? அப்பாவா?

நடுங்கிய கையில் ரிசீவரை எடுத்த எனக்கு வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.

மறுமுனையிலிருந்து, “ஹலோ, ஜீவா தம்பியா? நான் லட்சுமி பேசறேனுங்க” என்று என் வேலைக்காரியின் குரல் கேட்டது.

இப்போதும் என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியவில்லை.

லட்சுமி, “தம்பி, நம்ம அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருச்சுங்க. மூக்குமுழியெல்லாம் அப்படியே நம்ம அய்யாவ உரிச்சு வச்சிருக்குங்க” என்றாள்.

முதல் முறை என் இதழ்களிலிருந்து உடைந்த வார்த்தை,

“அப்பா”